ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகளின் திட்டம் இதுவே- நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய சாணக்கியன்!

கிழக்கு மாகணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? நடை பெறாதா? என்ற நிலை காணப்பகின்றது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்துடன் இணைந்து, 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கொவிட் – 19 தொற்றின் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. சுமார் 700 பேர் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு அவசரமாக தேர்தல் நடத்தியமையினாலேயே கொவிட் -19 முதலாவது அலையை எதிர்கொண்டோம்.

கொவிட் -19 முதலாவது அலை ஏற்படுவதற்கான முழுக் காரணம் இந்த அரசாங்கமே. கொவிட் முதலாவது அலையிலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை இடம்பெற்ற கொவிட் முதலாவது அலையில் 20வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியது இந்த அரசாங்கம். கொவிட் மூன்றாவது அலை போர்ட் சிட்டி அலை. நாடாளுமன்றம் இங்கு கூடியிருப்பது நாளைய தினம் போர்ட் சிட்டியின் இரண்டாவது வாசிப்பினை எடுக்க வேண்டும் எனும் காரணத்திற்காகவே ஆகும்.

பல்வேறுபட்ட கருத்திட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வது என்று கூறி கிராமிய மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள். கிழக்கு மாகாணத்தில் 2008 – 2012 வரை ஒரு தமிழ் முதலமைச்சர், 2013 – 2017 வரை முஸ்லிம் முதலமைச்சர், அடுத்த தேர்தலில் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரைக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ளார்கள். 25 மாவட்டங்களில் 25 ஆர் டி எச் எஸ். மாத்திரமே உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 26 வது ஆர் டி எச் எஸ் ஒன்று உள்ளது. கல்முனைப் பிரதேசத்திற்கென ஒரு ஆர்.டி.எச்.எஸ், அம்பாறை மாவட்டத்திற்கென ஒரு ஆர்.டி.எச்.எஸ் காணப்படுகின்றது. கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்று உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்துடன் நிலத்தொடர்பு இல்லாத கல்வி வலயம் ஒன்று உள்ளது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்ற ஒன்றை உப பிரதேச செயலகமாக தரம் குறைத்துள்ளனர்.

இதற்கு கல்முனையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பின்னணியாக இருப்பார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இந்தச் செயலானது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கும் உறவினை சீர்குலைப்பதற்காகவே நடைபெறுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள், அசாத் சாலியை கைது செய்து வைத்துள்ளார்கள், புர்கா அணிவதைத் தடை செய்துள்ளார்கள், மதரசாக்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

இதில் எதற்காவது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்களா? ஆனால் தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக செயற்படுகின்றார்கள் . இங்கு அவர்கள் அரசியல் ஆதாயத்தையும் தங்கள் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச தமிழ் அரசியல்வாதிகளும் மக்களுக்கு எதிரான செயல்களை மேற்கொள்கின்றார்கள்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கூறினார், கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் கிழக்கு மாகண நிர்வாகத்தை முடக்குவேன் என்று. ஆனால் இன்று அதைப் பற்றி எவ்வித பேச்சுக்களும் இல்லை. பிள்ளையான் நாடாளுமன்ற பங்குபற்றல் மற்றும் செயல்பாடுகளின் தர வரிசையில் 223 வது இடத்தில் காணப்படுகின்றார். ஆனால் சம்மந்தன் ஐயா 88 வயதிலும் 216 வது இடத்தில் உள்ளார். மட்டக்களப்பு மக்கள், மட்டக்களப்பினை மீட்பேன் என்று பிள்ளையான் கூறிய பொய்யினை நம்பி அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவர் இன்று வரை கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கை எதனையும் செய்யவில்லை. கருணா என்பவர் வந்தார் மக்களின் வாக்குகளைப் பிரித்தெடுத்து விட்டு தற்போது அவரையும் காணவில்லை. தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை பலப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கம் அதிகரித்துகொண்டு வருகின்றது.

விகாரை மற்றும் பெளத்த மையம் என்பவற்றினை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மயிலத்தமடுவில் 10,000 ஏக்கர் காணியும் மற்றைய இடங்களில் 5000 ஏக்கர் காணியும் பறிபோயுள்ளது . இதைப்பற்றி கதைக்க முடியாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைக்கப் போகின்றார்கள் அதற்காக திட்டம் தீட்டுகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply