பனிப்போரைக் கைவிடுங்கள் – ஸ்ரீலங்கா அரசுக்கு இடித்துரைப்பு

தாம் ஒருபோதும் கொரோனா தொற்றுப் பரவலை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குள் காணப்படும் பனிப்போரை கைவிட்டு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள கொரோனா தொற்று நிலமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஊடான அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளி ஊடான அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பன்னாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கையின் வைத்திய கட்டமைப்பிற்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச வைத்திய உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்தோடு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீலங்காலுக்கு தேவையான அத்தியாவசிய தேவையாகக் காணப்படுகின்ற தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறும் இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

குறுகிய நேரத்தில் அதிகளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு உகந்த பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியுள்ளோம்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் நடமாடும் வைத்தியசாலைகள் அத்தியாவசியமானவையாகும். இது தொடர்பில் தூதுவர்களுடனான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

எமது பிரதான இலக்கு சகல மக்களையும் கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதாகும். இதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது எமது எதிர்பார்ப்பல்ல.

நாம் ஒருபோதும் கொரோனாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதுமில்லை.

தற்போது அரசாங்கத்திற்குள் காணப்படும் பனிப்போரைக் கைவிட்டு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply