ஞானசார தேரர் கைது செய்யப்படாதது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரரை கைது செய்யத் தவறியது ஏன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி ஆயிஷா ரிஷாத் எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் ஞானசார தேரரையும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களில் ஒருவராக அறிவித்ததாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஆயிஷா ரிஷாத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஞானசார தேரர் மற்றும் அறிக்கையில் பெயரிடப்பட்ட ஏனையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனது கணவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபடவில்லை, ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் “அவமானகரமான முறையில்” கைது செய்யப்பட்டார் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், தனது கணவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆயிஷா ரிஷாத் கோரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அக் கடிதத்தில் அவர் உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக ஏப்ரல் 27ம் திகதி தடுப்பு உத்தரவு பெறப்பட்டது.

இருவரும் ஏப்ரல் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், அஜித் ரோஹான தெரிவித்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான தற்கொலை குண்டுவீச்சாளர்களுக்கு உதவினர்கள் என்ற குற்றச்சாட்டில் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply