பேரினவாத அரசின் சிங்கள, பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு துணைபோகின்றதா வடமாகாண சுகாதார அமைச்சு?

பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாறு (வெலி ஓயா) பகுதியில் அண்மையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மத்திய மருந்தகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள சித்த மருந்தகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழி இரண்டாம் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த திறப்பு விழா நிகழ்விற்கு மதகுருக்களின் சார்பில் பௌத்த மதகுரு ஒருவரே அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீகமான மணலாறு (வெலி ஓயா) பகுதியில், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் கடந்த 30.04.2021 அன்று, சித்த மத்திய மருந்தகம் ஒன்றினைத் திறந்துவைத்துள்ளது. குறிப்பாக வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் திருமதி.ஜெமநாமகணேசன் கனகேஸ்வரி இந்த சித்த மத்திய மருந்தகத்தின் பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து மக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாகத் திறந்துவைத்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த சித்த மத்திய மருந்தகத்தின் பெயர்ப் பலகையில் சிங்களமொழி முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழி இரண்டாம் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயகப் பரப்புக்களில் ஒன்றான, வடமாகாணத்தில் தமிழ் மொழி ஓரங்கட்டப்படுவதையும் சிங்களம் முன்னுரிமைப்படுத்தப்படுவதையும் ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப் பகுதியை திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு ஆக்கிரமித்துள்ளது. மகாவலி (எல்) முதலான அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப் பகுதியில் தற்போது அதிகளவில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழர்களின் மணலாறு தற்போது சிங்களப் பேரினவாத அரசினால் வெலி ஓயாவாக மாற்றப்பட்டுள்ளது. மணலாறு வெலி ஓயாவாக மாற்றப்பட்டு, அங்கு சிங்கள மக்கள் அதிகளவில் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதற்காக, அங்கு சிங்களமொழியினை முன்னுரிமைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தமிழர்களுக்குரித்தான, தமிழர்கள் அதிகம் அதிகம் வாழும் வடமாகாணத்தில் தமிழ்மொழியே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அதிகமாக சிங்கள மக்கள் வசிக்கக்கூடிய தென்னிலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள், அவ்வாறு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக அப்பகுதிகளில் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவ்வாறிருக்க தமிழர்களே அதிகமாக வசிக்கின்ற வடமாகாணத்தில் எவ்வாறு சிங்கள மொழியினை முன்னுரிமைப்படுத்த முடியும்?

அதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்விற்கு மத குருக்களின் சார்பில், ஒரு பௌத்த பிக்கு மாத்திரமே அங்கு கலந்துகொண்டுள்ளார். ஏனைய மதங்களின் மத குருக்கள் குறித்த நிகழ்வில் ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. மேலும் குறித்த சித்த மத்திய மருந்தகமானது, மத்திய அரசினால் அங்கு திறந்துவைக்கப்படவில்லை.

வடமாகாண சுகாதார அமைச்சின்கீழான, சுதேச மருத்துவத் திணைக்களத்தினாலேயே அங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வடமாகாண சுகாதார அமைச்சும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும் அவற்றின் அதிகாரிகளும் இந்த பேரினவாத அரசின் சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு துணைபோகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply