இலங்கையும் ஆபத்தான நாடுகளில்…! உபுல் ரோஹண விடுத்துள்ள எச்சரிக்கை

வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதனால், இலங்கை மிகவும் அபாய கட்டத்திலுள்ள நாடாகும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வைரஸ் மிக வேகமாக பரவுவதாகவே விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் இதுவரையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வைரஸ் பரவியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இந்திய பிரஜைகள் உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவலாகச் செல்கின்றனர். இலங்கை மிகவும் அபாய கட்டத்திலுள்ள நாடாகும். கடல் மார்க்கமாக பெரும்பாலான இந்திய மீனவர்கள் அநாவசியமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே கடற்படையினர் மற்றும் பொலிஸாரிடம் இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனரா என்பது தொடர்பில் மிக அவதானத்துடன் கண்காணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதன் மூலம் பிரிதொரு வைரஸ் பரவ ஆரம்பித்தால் நாடு என்ற ரீதியில் நாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே இந்திய பிரஜைகள் என்று சந்தேகிக்கின்ற எந்தவொரு நபரையும் அடையாளம் காணும் பட்சத்தில் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது சுகாதார தரப்பினருக்கு அறிவிக்குமாறு மீனவர்களிடமும் கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

இது தொடர்பில் மிக அவதானமாக செயற்படாவிட்டால் மீண்டும் வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

Be the first to comment

Leave a Reply