பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில்


பிரிட்டனில் திரிபடைந்த கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவியதுடன், இவை 55 வீத மரணத்தையும் 50 வீத பரவும் வேகமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத் துறை பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, குருநாகல், பொரலஸ்கமுவ போன்ற பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரி மூலமாக பிரிட்டனின் திரிபு வைரஸ் இலங்கையில் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அது 50 வீதத்தை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டு வருகின்றனர். அதேபோன்று வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் தொடர்பிலும் சமூகத்திலிருந்து பெருமளவில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதனை கருத்திற் கொண்டு நாம் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டோம். கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் 43 மாதிரிகளை பெற்று நாம் ஆய்வு செய்தோம்.

நேற்றுக் காலை பெற்றுக்கொள்ளப்பட்ட அதன் பரிசோதனை அறிக்கைக்கிணங்க பிரித்தானியாவின் திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதை நாம் நூற்றுக்கு நூறு உறுதி செய்துள்ளோம்.

இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அந்த வைரஸ் 55 வீதமான மரணங்களை ஏற்படுத்தலாம் எனவும் அதேபோன்று வைரஸ் பரவும் வேகம் 50 வீதமாக அதிகரிக்கலாம் என்றும் அறியமுடிகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த அஸ்ட்ரா செனாகா தடுப்பூசியானது சிறந்த பெறுபேற்றை தந்துள்ளது. அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் இதற்கு தீர்வை காண முடியும்.

ஆனால், எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாகும். கடந்தகாலத்தில் ஓரளவு பாதகமற்ற வைரஸ்தான் இருந்தது. புதிய வகை வைரஸானது மிகவும் ஆபத்தானது.

புதிய வகை வைரஸ் பரவியுள்ள நாடுகள் அனைத்து பாரிய இழப்புகளை சந்தித்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில்தான் பிரிட்டனில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு பாரிய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசியின் ஊடாக ஓரளவு தீர்வை கண்டுள்ளனர்.

இந்தியாவிலும் புதியவகை கொவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எமது நாட்டுக்குள் தற்போதுதான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இதனை பரவலடையாது கட்டுப்படுத்த வேண்டும். வைரஸானது மிகவும் வேகமாக இலங்கை முழுவதும் பரவலடைந்துள்ளது என்றார்

Be the first to comment

Leave a Reply