இலங்கையில் பிராணவாயு தட்டுப்பாடா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் வைத்திய தேவைக்கான பிராணவாயு போதுமான அளவு காணப்படுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கான கட்டில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ்சிற்கு எதிரான முதலாவது அஸ்ராசெனகா கொவிசீல்ட் தடுப்பூசி மருந்தைப் பெற்றவர்களுக்கு நேற்று முதல் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாளிகாவத்தை மாவட்ட வைத்தியசாலையில் முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,

இந்தியாவின் நிலைமைத் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையிலேயே இலங்கையிலும் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கருத்துகள் வெளியாக ஆரம்பித்தது.

எனினும் எமது நாட்டில் பிராணவாயு பற்றாக்குறை என எதுவும் இல்லை. விசேடமாக இலங்கையில் பிராணவாயுவை தயாரிக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன.

அவர்களின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை மாத்திரமே நாம் வைத்திய தேவைக்காக பெற்றுக்கொள்கின்றோம். அவர்களுடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு பகுதி கட்டில்ககளை மாத்திரமே நாம் கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கியிருந்தோம். மூன்றாம் அலை காரணமாக அவை முழுமையாக நிரம்பியுள்ளன.

ஆகவே இதற்கு முன்னதாக பயன்படுத்தாத வைத்தியசாலைகளில் காணப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டில்களையும் பயன்படுத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். ஆகவே இந்த நிலைமையை சமாளிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply