அரசாங்கத்திற்கு விரிக்கப்பட்டுள்ள வலை! எதிர்க்கட்சி சூளுரை

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வலையை ஏற்கனவே விரித்து விட்டதாகவும் தேவையான நேரத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி யட்டிநுவர தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை கட்டுகஸ்தோட்டை நகரில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால், பொருளாதாரத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் போயுள்ளது. அனைத்துக்கும கோவிட் பரவலை காரணமாக காட்டுகின்றனர். எனினும் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா பரவல் இருந்த போதிலும் அத்தியவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இதுதான் எமது நாட்டுக்கு ஏனைய நாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். எமது நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பதே இதற்கு காரணம். மக்களிடம் வரி விதிப்பதை தவிர நிதியை திரட்ட அரசாங்கத்திடம் வேறு வழிகள் இல்லை.

உண்மையில் அரசாங்கம் தற்போது நாட்டின் நிர்வாகத்தை கைவிட்டுள்ளது. எவ்வித நிர்வாகமும் இல்லை. அரசாங்கத்தின் அதிகாரங்களில் பெரும்பான்மையான அதிகாரங்களை ராஜபக்ஷ குடும்பத்தினர் தமக்குள் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அமைச்சர்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை.

ராஜபக்ஷ குடும்பத்தினர், கூட்டுத்தாபனங்கள், திணைக்களம் என அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அமைச்சர்கள் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கின்றனர் என்பது கடந்த வியாழக்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்த போது காண முடிந்தது.

அமைச்சர்கள் எவரும் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை. அமைச்சர்கள் எவரும் இரண்டு நாள் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றவில்லை என்பதை காணும் போது அவர்கள் எந்தளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

அரசாங்கத்தின்நிலைமையை இதில் இருந்தே புரிந்துக்கொள்ளலாம். அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரசாங்கம் எதிர்காலத்தில் பாரிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அமைச்சரவையின் அனுமதியை பெறாது.

நேரடியாக ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக தேவையான ஆவணங்களில் கையெழுத்து அந்த திட்டங்களை ஆரம்பிப்பார்கள். இவை அனைத்து சட்டத்திற்கு புறம்பான வேலைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply