சதி முயற்சிகளை முறியடிப்பேன்! பிரதமர் மஹிந்த சூளுரை

மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன். அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி, ஒரு குடும்பமாக இயங்குகின்றது. குடும்பம் என்றால் அதற்குள் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலத்தை அறியாமல் சிலர் செயற்படுகின்றனர். எமது கூட்டணி அரசை எவராலும் பிளவுபடுத்த முடியாது” – என்றார்.

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம்அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டுக் கட்சிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஒரு நிலைப்பாட்டையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டையும் கொண்டுள்ள காரணத்தால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தினக் கூட்டம் என்பன குறித்தும் இன்று இடம்பெறவுள்ள ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply