அமெரிக்க அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப் பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே மாதம்1ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற டிரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.

ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே மாதம்1ஆம் திகதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தலீபான்களுடனான ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்ப்பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்த கோர சம்பவத்தின் 20-வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் 11ஆம் திகதி அனுசரிக்கப்பட உள்ளது.

அந்த நாளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரும் திரும்பப்பெறப்பட உள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

Be the first to comment

Leave a Reply