தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷனைச் சேர்ந்தோர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாகப் புகுந்த அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்குச் சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று (09) காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்குச் செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளைப் போட்டு பாதையை மறித்திருந்தனர்.
எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஐந்து வரையான மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply