சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் பந்துல

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் நேற்று உறுதி செய்துள்ளது.

நான்கு இறக்குமதி நிறுவனங்களால் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயில் எப்லடோக்ஸின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்துள்ளதை தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் அவற்றை சந்தைக்கு விநியோகிக்கவில்லை என்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டுக்கே அதனை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேற்படி சர்ச்சைக்குரிய தேங்காயெண்ணெய் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தக அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சுங்கம், நுகர்வோர் அதிகார சபை, தர நிர்ணய நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் முக்கியஸ்தர்களையும் அழைத்து அமைச்சர் அது தொடர்பில் உண்மை நிலையை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன;

மேற்படி புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய் இது போன்ற பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விற்பனைக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

நுகர்வோர் அதிகாரசபை, சுகாதார அமைச்சின் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு பிரிவு மற்றும் தர நிர்ணய நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நாட்டுக்கு மீள்ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பொருட்கள் தனியார் துறை நிறுவனங்கள் மூலமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

தேங்காய் எண்ணெய் மட்டுமன்றி பால்மா பருப்பு, ரின்மீன் உட்பட பல்வேறு இறக்குமதிப் பொருட்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றன.

இம்முறை தேங்காய் எண்ணெயில் மேற்படி இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இனிமேல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் விஷேட பரிசோதனைக்கான பிரிவு மேற்படி தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனையடுத்து தர நிர்ணய நிறுவனமானது அதனை சுங்கத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளதுடன் மேற்படி தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க மேற்படி தேங்காய் எண்ணெய் விற்பனைக்காக சந்தைக்கு விடப்படவில்லை என்பதுடன் ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் நாட்டின் 25 மாவட்டங்களில் தற்போது விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேங்காய் எண்ணெயை மூன்று நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன. அலி பிரதர்ஸ் தனியார் நிறுவனம், கட்டான ரிபைன்ரீ, எதிரிசிங்க ஏபல் ஒயில் ஆகிய நிறுவனங்களேஅவை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply