13வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவில் ஆதரிக்கின்றோம்- சஜித்

வடக்குகிழக்கு மக்களின் கரிசனைகளை அரசாங்கம் செவிமடுக்கவேண்டும்
உள்நாட்டு பொறிமுறை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விதத்தில் அமைந்திருக்கவேண்டும்
13வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவில் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய ஐக்கியதேசமொன்றே தனது கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கு மக்களின் கரிசனைகளை செவிமடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ள அவர் முன்னை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்ததன் விளைவே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தனது கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தை கையாள்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதை தனது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு வெளிநாடுகளிடமிருந்து ஆலோசனை தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது உள்நாட்டு பொறிமுறைகளை பயன்படுத்தி தனது பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் எனதெரிவித்துள்ள அவர் உள்நாட்டு பொறிமுறை சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்னொரு தீர்மானத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கத்துடன இணைந்து செயற்பட தயார் எனவும் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply