கோட்டாபய அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய செய்தி

இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக ஐநா மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதாகவும் எனவே இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை காண்பதற்கான நம்பகத்தன்மை மிக்க அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையிடும் தேவைகளை தீர்மானம் விஸ்தரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஆணையையும் வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply