காடழிப்பிற்கான அனுமதியை வழங்கியவர் கோட்டாபயவே- குற்றம் சாட்டும் ஜே.வி.பி!

கோட்டாபய-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜே.வி.பியினரால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, காடுகளை அழிப்பதற்கான அனுமதிகளை வழங்கியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிங்கராஜ, முத்துராஜ உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் பெறுமதிமிக்க காடுகள், தனியார் நிறுவனங்களுக்கான இடங்களுக்காக அழிக்கப்படுவதாக ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி கொழும்பு புறக்கோட்டையில் ஜே.வி.பியினர் நேற்றைய தினம் மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஓல்கொட் மாவத்தையில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி புறக்கோட்டை மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக வந்தடைந்த நிலையில், அங்கு மாநாடும் நடத்தப்பட்டது.

இதன் போது பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று பாரிய அளவில் காடழிப்புக்கள் இடம்பெறுகின்றன. சூழல் பாதிப்பிற்கு எதிராக பேசுகின்றவர்கள் தீவிரவாதிகள் என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிக்கின்றார். அப்படியானால் காடழிப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் காடழிப்பிற்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள ஆதிவாசிகளின் தலைவரான வன்னிலா எத்தோவும் தீவிரவாதிகளா என்பதை கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

வலப்பனைக்கு சென்ற அரச தலைவர் கோட்டாபய, ஜே.வி.பியினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிப்பிரசாரங்களை செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் வன அழிப்பு போலிப்பிரசாரம் என்பதை தெரிவித்த நந்தசேன சேறுபூசும் முகநூலினை கோட்டாபயவின் ஊடகப்பிரிவு உருவாக்கி 06 நாட்களில் அதனை பேஸ்புக் முடக்கியது.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின் 20ஆம் திகதி வலப்பனை சென்று ஜே.வி.பியினர் மீது குற்றஞ்சாட்டினார். காடுகளை அழிப்பதற்காக கோட்டாபய இன்று அனுமதியளித்துள்ளார். எனினும் காடழிப்புக்களுக்கு எதிராக எமது போராட்டம் தொடரும் என்பதை அறிவிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply