அதிவேகமாக பயணித்த காரில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி! 60 கிலோ மான் இறைச்சி

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரட்டப் தோட்ட பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் நால்வரை கம்பளை, புசல்லாவ பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயணித்த கார், வேட்டையாடப்பட்ட 60 கிலோ கிராம் மான் இறைச்சி, இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இவர்களை கம்பளை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைககளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தோட்ட பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ள காட்டுப் பகுதிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் அதிவேகமாக கார் ஒன்று பயணிப்பதாக பிரதேசவாசிகளிடமிருந்து புசல்லாவ பொலிஸாருக்கு சனிக்கிழமை இரவு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற புசல்லாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க ஹேமகுமார, பொலிஸ் பரிசோதகர் வசந்த அமர சேனவின் தலைமையில் பொலிஸ் குழு கம்பளை பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபர்கள் பயணித்த காரை மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது குறித்த காரை சோதனை செய்தபோது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று இரு பாகங்களாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பிளாஸ்டிக் பாத்திரங்களில் காணப்பட்ட சுமார் 60 கிலோ மான் இறைச்சியையும் கைப்பற்றினர்.

குறித்த காரில் பயணித்த மேற்குறிப்பிட்ட தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த இருவருமாக நால்வர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயணித்த காரிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் இங்கிலாந்து நாட்டு தயாரிப்பான துப்பாக்கி அனுமதிப்பத்திரமின்றி நாட்டுக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரியந்த பீரிஸின் வழிகாட்டலுக்கமைய விசேட பொலிஸ் அதிகாரி ஜாலியஹீங்கந்தவின் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Be the first to comment

Leave a Reply