விகாரைக்காக காணி அளவீடு- ஒன்று திரண்ட மக்கள்!

திருகோணமலை 64 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றிய பகுதியில் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்டபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் குட்டியாராம விகாரை, மலை உச்சியில் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி மக்களுடைய காணிகள் இருக்கின்றன. இந்நிலையில், விகாரைக்கு 300 ஏக்கர் காணி தேவைப்படுவதாகக் கூறியே அளவீடு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள மலைப்பகுதியை அளவீடு செய்வதற்கு தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தி இருந்த போதிலும் தாம் குடியிருந்து வரும் காணிகளையும் சுற்றி அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும், இதனாலேயே தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த இடத்துக்கு அளவீடு செய்ய வருகை தந்த நில அளவையாளர்கள் மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டவும் தெரியவருகின்றது.

Be the first to comment

Leave a Reply