
இந்தியாவுக்குப் போட்டியாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை முன்னெடுத்துவரும் இரகசிய முயற்சியை அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் தலைவரான மருத்துவர் ரவி குமுதேஷ் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதன்போது பேசிய அவர்,
ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இன்று வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதனை அரச தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். சீன தடுப்பூசி குறித்த விடயங்கள் ஆரம்பத்திலிருந்தே தெளிவற்றதாக உள்ளது. இன்றுவரை சீன தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.
சீன தடுப்பூசி என்பது மூன்றாம்கட்ட ஆய்வுகளைக்கூட முடிவுறுத்தாத தடுப்பூசியாகும். தடுப்பூசி என்பது மூன்றாம்கட்ட பரிசோதனையிலேயே மனிதர்களுக்கு பொருந்துமா? தொற்றினை தடுக்கும் திறன் உள்ளதா? பக்கவிளைவுகள் உள்ளதா என்பதை அறியமுடியும். அப்படியொரு பரிசோதனையற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிக்காத இந்த சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஏன் சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.
இந்தியா – சீனாவுக்கு இடையிலான தடுப்பூசி போட்டி இன்று சுகாதார ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அதிகாரிகளிடையே ஏற்பட்டிருக்கின்றதா? எமக்கு சீனா, இந்தியா முக்கியமல்ல, இவ்விரண்டு நாடுகளும் முன்னர் ஆயுதங்களை வதை்தே மோதின. இன்று வர்த்தகத்தை வைத்து மோதுகின்றன. இதில் நாங்கள் தலையிடக்கூடாது.
எந்த தடுப்பூசி சிறந்தது என்பதையே நாம் பார்க்கவேண்டும். இவற்றில் சில அரசியல்வாதிகளின் தலையீடுகளையும் அரசாங்கம் அவதானிக்க வேண்டும். டி.என்.ஏ மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனைகளை நடத்தும்படி நாங்கள் கூறியபோதும் இதுவரை நடக்கவில்லை. ஒரேயொரு நிறுவனம் மாத்திரமே செய்கிறது.
பி.சி.ஆர் பரிசோதனையிலும் மாபியா செயற்படுகின்றது. தனிமைப்படுத்தல் நடைமுறையில் வெளிநாட்டவர்கள் வரும்போது தனியார் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதிலும் ஒருதரப்புக்கே நன்மையளிக்கப்பட்டுள்ளது. இன்று ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தனிப்பட்ட சிலருக்காக செயற்படுகின்றது என்றார்.
Be the first to comment