அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று (18) கொழும்பு முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய அஜஹான் கார்திய புஞ்சிஹேவாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நோக்கில், இலங்கை வௌிவிவகார அமைச்சு மற்றும் மலேஷியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மலேஷிய அரச அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்துடன் மேலுமொரு குற்றப்பத்திரம் இணைக்கப்பட்டு, திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றில் அறிவித்தார்.

இதனடிப்படையில், அர்ஜூன மகேந்திரன் மற்றும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய பிரதிவாதிகளை மன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மன்றுக்கு அறிவிப்பதற்காக, குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply