இன்றைய எழுச்சி பேரணியின் யாழ் மற்றும் கிழக்கு மாணவ ஒன்றியத்தின் அறிக்கை


இன்றைய எழுச்சி பேரணியின் மாணவ ஒன்றியத்தின் அறிக்கை

17-03-2021
கௌரவ தூதுவர்கள்
உறுப்பு நாடுகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
சிறீலங்கா அரசின் ஈழத் தமிழினத்திற்கு எதிரான போர் வரலாற்றில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது. பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுப் பரப்பில் ஆயுதம் மௌனிக்கப்பட்ட சூழலில் சிறீலங்கா அரசு முழுமையான கட்டமைப்புசார் இனவழிப்புப் போரை வடக்கு கிழக்கில் தொடுத்துள்ளது. வடக்கு கிழக்கில் ஆயுதங்கள் அற்ற போர் முனைகளை உருவாக்கியுள்ளது. ஈழத் தமிழர் பண்பாட்டின் மீது பொருளாதாரத்தின் மீது, வரலாற்றின் மீது, தொல்லியல் மீது, ஆள்புல கட்டுறுதியின் மீது ஈழத் தமிழ் அடையாளத்தின் மீது என ஈழத் தமிழ்த் தேசத்தின் ஒவ்வொரு கட்டமைப்பின் மீதும் அழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை முற்றாக மறுதலித்து நிராகரித்து வரும் சிறீலங்கா அரசு, சிறீலங்காவை சிங்கள பௌத்த தேசமாக மட்டுமே கட்டமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. வடக்கு கிழக்கை இராணுவ மயப்படுத்தி தமிழினத்தின் மீதான ஏகாதிபத்தியத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தமிழினத்தின் மீதான இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக சனநாயக வழியில் தன்முனைப்பான போராட்டத்தை ஈழத் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். நிலைமாறுகாலம் இல்லாத நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக் கூடாக நீதி கிடைக்குமென நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பாத நிலையிலும் சிறீலங்கா அரசு திணித்து வருகின்றது.
சிறீலங்காவின் உள்ளக விசாரணைப் பொறிமுறையையும் கலப்புப் பொறிமுறையையும் ஈழத்தமிழர்கள் நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். தமிழர்கள் நிராகரித்த நிலையில் கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கலப்புப் பொறிமுறையை பரிந்துரைத்தமை அபத்தமே. ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்டப்ட ஈழத் தமிழினத்திற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்க முடியும் என்ற நம்பிக்கையை நமது பட்டறிவின் அடிப்படையிலேயே சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறிவந்துள்ளோம்.
சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதன் ஊடாக அல்லது வேறு சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் மூலமாக மட்டுமே தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என ஆணித்தரமாக நம்புகின்றோம். தமிழினப்படுகொலைக்கான நீதியில் உதிரிகளைத் தண்டிப்பதன் ஊடாக தமிழனத்திற்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. சிறீலங்கா அரச கட்டமைப்பானது தமிழ்த் தேசிய அரசியல் நீக்க செயற்பாடுகளிலும் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கின்றோம்.

1) தமிழ்த் தேசத்தின் மீதான சிங்கள பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், இராணுவ மயமாக்கலும் நீக்கப்படல் வேண்டும்.

2) தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குற்றங்கள் உள்ளிட்ட பொறுப்புக் கூறல் விவகாரம் மனித உரிமைகள் பேரவையின் அனுசரனையுடன் அவற்றை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உறுப்புநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்ய வேண்டும்.

3) வடக்கு கிழக்கை தமிழரின் தாயகமாக அங்கீகரித்து தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும்.

4) சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவியல் வழக்குகளுக்கு சிறிலங்காவைப் பாரப்படுத்தும் நோக்கில் சிரியாவில் நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை ஒருவருட கால வரையறையுடன் ஐக்கிய நாடுகள் பொதுக்கச்சபையில் உருவாக்க வேண்டுமென்ற பரிந்துரையை செய்யப்படல் வேண்டும்.
5. இலங்கையில் தற்போதும் தொடரும் தமிழர் உரிமை மீறல்களுக்களை தொடர்ந்து கண்காணிக்க ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் கள இருப்பைக் கொண்டிருக்கவும் விசேட பொறிமுறையை உருவாக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
மேற்படி விடயங்களை புறக்கணித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தயாரிக்கப்பட்டுள்ள 46/1 என்ற தீர்மான வரைபானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயரால் தீர்மானமாக நிறைவேற்றப்படுவதனை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
நன்றி
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

Be the first to comment

Leave a Reply