யாழ்ப்பாண யமுனா ஏரி” வரலாறு

இந்தியாவின் யமுனா நதியில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து இதில் கலக்கப்பட்டதால் “யமுனா ஏரி” ஆகியது.

இலங்கையில் அன்று காணப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் ஆகிய மூன்று அரசுகளிலும் தனித்துவமும், பண்பாடுகளும் கொண்டதாக விளங்கிய, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி முறைகளும் நகர வடிவமைப்புக்களும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற வரலாற்று மூலங்களிலிருந்தும் இதன் சிறப்புக்களை அறிய முடிகிறது. அவ் வரலாற்று மூலங்கள் ஒவ்வொன்றும் யாழ்ப்பாண அரசின் தலைநகர் ‘சிங்கை’, ‘யாப்பாபட்டுன’, ‘நல்லூர்’ என வேறுபட்ட தகவல்களைத் தருகின்றன.

சிறப்பும்,அழகும் வாய்ந்த நல்லூர் இராசதானியின் அமைப்புப் பற்றியும் யாழ்ப்பாண வைபவமாலையில்
“நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடுவித்து மாட மாளிகையும், கூட கோபுரங்கைளையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்ஞான மண்டபமும். முப்படைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்தில் யமுனா நதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு நீதிமண்டபம், யானைப்பந்தி, குதிரை லாயம், சேனாவீரர் இருப்பிடம் முதலியன கட்டுவித்து கீழ்திசை வெய்யிலுக்குகந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோயிலையும், தென்திசைக்கு கைலாய பிள்ளையார் கோயிலையும், வடதிசைக்கு சட்ட நாதேஸ்வரர் கோயில் தையல்நாயகி அம்மன் கோயில், சாலை விநாயகர் கோயிலையும் அமைப்பித்தனர்”
என்ற வர்ணனையின் மூலம், யாழ்ப்பாண நகரத்தின் அழகு விபரிக்கப்படுகின்றது.
யமுனா ஏரி என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தின் நல்லூரில் அமைந்துள்ள ஒரு பழங்கால குளமாகும். 1948 ஆம் ஆண்டில் இது இலங்கை அரசாங்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் இடிபாடுகளில் ஒன்றான யமுனா ஏரி முப்புடைக் கூபம் எனவும் அழைக்கப்பட்டது. “ப” வடிவில் அமைந்த இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு கல்தோரண வாயிலிலுக்குக் கிழக்கே உள்ள வளவில் உள்ளது. சங்கிலியன் தோப்புக்கு கிழக்குப் புறமாக தற்போது அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சின் எல்லையுடன் அமைந்த யமுனா ஏரியினை சங்கிலியன் தோப்பு நுழைவாயிலுக்கு அருகாமையாகச் செல்லும் பாதையினூடாகச் சென்றால் பார்க்க முடியும்.
காலவரிசை வரலாற்று புத்தகமான யாழ்ப்பாண வைபவ மாலையின் படி இது யாழ்ப்பாண இராச்சிய மன்னர் சிங்கை அரியன் செகராசசேகரன் (1215–1240) ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவின் யமுனா நதியில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து குளத்தில் உள்ள தண்ணீருடன் கலப்பதை எடுத்துக்காட்டுகிறது.

யாழ்ப்பாண வைபவ மாலை இந்த குளம் பிற்கால மன்னரான சிங்கை பரரசசேகரம் (1478-1519) என்பவரால் கட்டப்பட்டது என்று கூறுகிறது.
இதனை அமைத்தபொழுது, இந்தியாவில் உள்ள புனிதமான யமுனா நதியில் இருந்து காவடிகளில் நீரைக் கொண்டுவந்து கலக்கப்பட்டதால் இது “யமுனா ஏரி” எனப்பட்டது என முதலியார் செ. இராசநாயகம் குறிப்பிடுகின்றார். இவ்வேரியின் அமைப்பும், கட்டடத் தொழினுட்பமும் அக்காலத் தமிழ் அரசர்களின் மதிநுட்பத்தைக் காட்டுகின்றது. இக் கேணியினுள் இறங்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்த ஏரியினுளிருந்து கண்டெடுக்கபபட்ட அம்மன் சிலையைக் கொண்டு அக்கால அரசர்கள் தமக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் தமது சொத்துக்களை இதனுள் போட்டுவிட்டு தப்பிச் சென்றதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் இருந்தும் அறிய முடிகின்றது.

இந்த குளம் “மூன்று பக்க கிணறு” ஆகவும் தமிழ் எழுத்தின் வடிவமான “ஹே” ஆகவும் செங்கற்களால் கல் படிகளால் ஆனது அது உள்ளேயும் வெளியேயும் சென்றடைய கட்டப்பட்டு வசதியான குளியலிற்கு அனுமதிக்கிறது. மையத்தில் ஒரு அலங்கார மலர் தோட்டம் உள்ளது. உள்ளூர் புராணக்கதைகள் யமுனா எரியை யாழ்ப்பாண இராச்சிய ராணியால் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிடுகிறன. மேலும் மந்திரி மனை உடன் (அமைச்சரின் அரண்மனை) நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டன என்றும் அறியமுடிகிறது.

இதேபோன்ற புராணக்கதை தமிழ் மன்னர்களும் அரச குடும்பங்களும் குளத்தைப் பயன்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிடுகிறன. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முதன்மை தெய்வமான கார்த்திகேயா சிலைக்கு சடங்கு குளியல் வழங்க குளம் பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தை வென்றவர்கள் குளத்தை குளிக்க பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இன்று இவ் யமுனா ஏரியின் அணைக்கட்டுக்கள் உடைந்து விழும் நிலையில் இருப்பதுடன் அதனைச் சுற்றி வளர்ந்துவரும் மரங்களின் வேர்கள் ஓடி அவற்றை மேலும் சிதைத்துவிடும் அபாயம் காணப்படுகின்றது. அதேவேளை இவ் ஏரியில் சிறந்த பாதுகாப்பு இல்லாமையால் சிலர் மூழ்கடிக்கப்பட்டும் உள்ளனர் என்றும் இதற்கான ஆழம் இன்னும் கன்டறியப்படவில்லை என்றும் அப்பிரதேச மக்களிடம் அறிய முடிந்தது. தற்போது தொல்லியல் திணைக்களத்தால் சிறு பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்

Be the first to comment

Leave a Reply