ஐ.சி.சி விசாரணை கோரும் அம்பிகா அம்மையாரின் போராட்டத்தை அனைவரும் பலப்படுத்துவோம். – த.தே.ம.முன்னணி

ஐ.சி.சி விசாரணை கோரும் அம்பிகா அம்மையாரின் போராட்டத்தை அனைவரும் பலப்படுத்துவோம். – த.தே.ம.முன்னணி

11.03.2021
திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்துக்கு
அனைவரும் ஒத்துழைப்போம்.

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 13வது நாளை எட்டியிருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவரது அகிம்சைப் போராட்டத்துக்கு வழங்கிவரும் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை சர்வதேச தரப்புக்கள் மதித்து, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை திறம்பட விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்-

சிரியாவில் நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (I.i.i.M) வலியுறுத்தியும், இதன்மூலம், சிறிலங்கா அரசின் சர்வதேச விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்கான சான்றுகள் மற்றும் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சேகரிக்கப்பட்டு குற்றவியல் வழக்குகளுக்கு சிறிலங்காவைப் பாரப்படுத்த வேண்டும் என்பதையும், உருவாக்கப்படும் i.i.i.M மிகக்குறுகிய காலஅவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கையில் தற்போதும் மேற்கொண்டு வரும் தமிழர் உரிமை மீறல்களுக்காக தொடர்ந்து கண்காணிக்கவும், இலங்கையில் OHCHR கள இருப்பைக் கொண்டிருக்கவும் விசேட பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்பதையும்,

இலங்கையின் வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதுடன், சுயநிர்ணய உரிமை கோரும் உரித்துடையவர்கள் என்பதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்மானிக்கும் வகையில், ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைக்கவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தி அம்மையாரின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 13வது நாளாக நடைபெற்று வருகின்றது.

ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக சர்வதேச அரங்கில் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா, சர்வதேச நடவடிக்கைக்கான ஐ.நா. மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உதாசீனம் செய்வதும், தன்னுடையதும் தனது அணிசார்ந்த நாடுகளதும் பூகோள நலனை மட்டும் கருதி பிரித்தானியா செயற்படுவதும், ஈழத்தமிழ் மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையளித்துள்ளது

தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு பிரித்தானியாவும் பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயம் உள்ளது. காலணித்துவ ஆட்சியின் முன்னர் தமிழர்கள் தேசமாகவே வாழ்ந்திருந்தோம்.
சிறிலங்காவிற்கு சுதந்திரத்தை வழங்கும்போது, தமிழர்களுக்குரிய அந்தஸ்தை வழங்கும் வகையில் பிரித்தானியா பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், தமிழர்கள் ஒடுக்குமுறைகளையும், இனவழிப்பையும் சந்தித்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்மக்கள் இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் சிக்குண்டே வாழ்ந்து வருகின்றோம்.

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து, தமிழர் வாழ்வில் ஒளியேற்ற முன்வரவேண்டும்.
அத்துடன், ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காக செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்,

செல்வராசா கஜேந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்.
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

Be the first to comment

Leave a Reply