மேல் மாகாண பாடசாலைகளில் 5, 11, 13 ஆகிய தரங்களே மார்ச் 15இல் ஆரம்பிக்கப்படும்; ஏனையவை ஏப்ரல் 19இல் : கல்வி அமைச்சர்

மார்ச் 15 திங்கள் முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 5ஆம் தரம், 11 ஆம் தரம் மற்றும் 13ஆம் தரம் ஆகியவை மட்டுமே தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

சித்திரை விடுமுறைக்குப் பிறகு ஏப்ரல் 19 ஆம் திகதி ஏனைய தரங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், “இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ பரிந்துரையைப் பெற்றுள்ளோம். அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மார்ச் 15 திங்களன்று, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. ஏனைய தரங்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் விடுமுறைக்குப் பிறகு தொடங்கப்படும். அதாவது ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும்” என்றார்.

தரம் 1 வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், அதற்குரிய மாணவர்கள் ஏற்கனவே பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

அதன்படி, தரம் 1 உட்பட மற்ற அனைத்து தர வகுப்புகளும் ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள ஆரம்பமாகும் என்றார்.

Be the first to comment

Leave a Reply