அச்சாறு செய்யும் முறை

அச்சாறு

தேவையான பொருட்கள்:

250 கிராம் சின்ன வெங்காயம்
2 பெரிய கரட்
200 கிராம் பச்சை மிளகாய் + கறி மிளகாய்
600 – 750 மி. லீற்றர் வினாகிரி
8-10 பேரிச்சம்பழம் அல்லது 1 மேகரண்டி சீனி
1 சிறிய துண்டு இஞ்சி
8 காய்ந்த சிவப்பு மிளகாய் – செத்தல் மிளகாய்
8 உள்ளிகள்
1 மேகரண்டி கடுகு
1 தேகரண்டி மிளகு
1 தேகரண்டி உள்ளி தூள் ( Garlic Powder அவசியம் அல்ல)
1-11/2 தேகரண்டி உப்பு – தேவையான அளவு உப்பு

  • பப்பாசிக் காய், போஞ்சி, அன்னாசி போன்ற வற்றையும் சேர்த்து அச்சாறு செய்யலாம். இங்கு நான் அவற்றைப் பாவிக்கவில்லை.

** வினாகரி இலங்கையில் விற்பனையாகும் சாதாரண வினாகிரி ( தென்னைமர வினாகிரி) அல்லது அரிசியில் செய்த வினாகிரியைப் பாவிக்கவும். புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் அங்கு விற்பனையாகும் முந்திரியில் தயாரித்த வினாகிரி அல்லது சில சுவையூட்டிகள், வாசனைப் பொருட்கள் சேர்த்த வினாகிரியை அச்சாறு செய்ய உபயோகிக்க வேண்டாம். அவற்றின் சுவை வேறுபடும்.

செய்முறை: மரக்கறிகளை துப்பரவாக்கி கழுவி வெட்டி எடுக்கவும். பச்சைமிளகாய், தோலுரித்த வெங்காயம் இவற்றை முழுமையாக பாவிக்கவும். முழுதாக உள் பச்சைமிளகாயில் கத்தியால் ஒரு கீறல் போட்டுவிடவும்.
செத்தல் மிளகாயை சிறிதளவு வினாகிரியில் சில நிமிடங்கள் ஊறவிடவும். கடுகு, மிளகு, இஞ்சி, உள்ளி, செத்தல் மிளகாய் இவற்றை சிறிது வினாகிரி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதனுள் 250 மி.லீற்றர் வினாகிரியைவிட்டு கொதிக்கப் பண்ணவும். வினாகிரி கொதித்தவுடன் அதனுள் முதலில் வெட்டிய கரட்டைப் போட்டுக் 1 நிமிடம் கிளறி வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு அதே சட்டியினுள் உள்ள கொதிக்கும் வினாகிரியினுள் வெங்காயத்தைப் போட்டு கிளறி உடனேயே வினாகிரியில் இருந்து எடுத்து கரட் உள்ள பாத்திரத்தில் போடவும். பின்பு அதேபோல் பச்சை மிளகாய்+ கறிமிளகாயைப் போட்டுக் கலக்கி 1 நிமிடத்தில் வெளியே எடுக்கவும். சட்டியில் வினாகிரி மரக்கறி போட்டு எடுக்க குறைவாக இருந்தால் அப்பப்போ மேலதிகமாக சேர்த்து கொதிக்க விடவும். மரக்கறிகளை இப்படி கொதிக்கும் வினாகிரியில் போட்டு எடுப்பதனால் மரக்கறிகளில் உள்ள ஈரப்பதன் குறைந்து மரக்கறியும் கொஞ்சம் அவிந்து வரும்.
பின்பு எஞ்சியுள்ள வினாகிரியைச் சட்டியில் சேர்த்து அதனூள் அரைத்து வைத்த கலவை, விதைகள் அகற்றி பாதியாக வெட்டிய பேரீந்து அல்லது சீனி, தேவையான அளவு உப்பு ( 1 தேகரண்டி), உள்ளித்தூள் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும். உப்பின் அளவைச் சரிபார்த்துக் கொள்ளவும். தேவையானால் மேலதிகமாக தேவையான அளவு (1/2 தேகரண்டி) சேர்த்துக் கொள்ளவும்.பின்பு அடுப்பின் சூட்டை அணைத்துவிட்டு வினாகரியில் போட்டு எடுத்த மரக்கறிகளைப் போட்டுக் கலந்து ஆறவிடவும். ஆறிய பின்பு ஈரமில்லாத சுத்தமான போத்தல்களில் நிரப்பி மூடிவைத்து பாவிக்கவும். மரக்கறிகள் நன்றாக அவிந்து விட்டால் உடனேயே உண்ணலாம். அரை அவியாலாக இருந்தால் 1-3 நாட்களின் பின்பு உண்ண எடுக்கவும்.

*** இங்கு நான் உடனேயே உண்ண எடுப்பதற்காக மரக்கறிகளை கொஞ்சம் கூடுதலாக அவியவிட்டு எடுத்துள்ளேன்.
அரை அவியலாக எடுத்து இருநாட்கள் வீனாகரியுடன் ஊறவிட்டு எடுப்பது சுவை அதிகமானதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

Be the first to comment

Leave a Reply