கருப்பு உடையில் திருப்பலியில் பங்குபற்றுங்கள் : சிறிலங்கா உயர்மறை மாவட்டம் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும்,

அன்றைய தினத்தில் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் நாடளாவிய அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ளும் மக்கள் கறுப்பு உடை அணிந்து திருப்பலியில் பங்கேற்குமாறும்

திருப்பலியின் நிறைவில் ஆலயத்திலிருந்து வெளியில் வந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மௌன எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் உயர்மறை மாவட்டம் நேற்று அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பதாக அதன் முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் தவறுமானால் நாடளாவிய பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், அவர்களுக்கு அனுசரணை வழங்கியவர்கள், நிதி பங்களிப்பு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த நடவடிக்கைகள் மேலும் தாமதப்படுத்தக் கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply