கார் தரிப்பிடத்தில் உறங்கிய படையினரால் வெடித்தது சர்ச்சை

கார் தரிப்பிடத்தில் உறங்கிய படையினரால் வெடித்தது சர்ச்சை

உடன் மன்னிப்பு கோரிய
அமெரிக்க ஜனாதிபதி பைடன்


பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் குவிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படையினர், அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள கார் தரிப்பிடத்தில் தூங்கும் புகைப்படம் வெளியாகி பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி ஜோ பைடன் அந்தப் படைத் தலைவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து மன்னிப்பு கோரியுள்ளார்.

பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வோஷிங்டன் டி.சி.யில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வியாழக்கிழமை வெளியான சில புகைப்படங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பின்னர், கப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள நிலக்கீழ் கார் தரிப்பிடத்தில் படுத்து உறங்குவதைக் காட்டின.

சில அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து கோபப்பட்டனர். சில மாநில ஆளுநர்கள் படையினரை திரும்ப அழைத்தனர்.

இதையடுத்து, குறித்த படைத் தளபதியை அழைத்த ஜனாதிபதி பைடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்றும் அவரிடம் கேட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதல் சீமாட்டி என அழைக்கப்படும் ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் படையினர் சிலரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் இருந்து அவர்களுக்காக கொண்டுவந்த பிஸ்கட்டை பரிசளித்தார்.

“என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

கார் பார்க்கிங்கில் சில பாதுகாப்புப் படையினர் உறங்க நேர்ந்த புகைப்படத்தைப் பார்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களே விமர்சனம் செய்தனர்.

பல நாள்களாக உஷார் நிலையில் வைக்கப்பட்ட பிறகு, கார் புகையிலும், கழிப்பறை வசதி இல்லாத நிலையிலும் அவர்கள் உறங்க நேர்ந்தது குறித்து பலரும் தங்கள் கவலைகளை வெளியிட்டிருந்தனர்.

Be the first to comment

Leave a Reply