நிபுணர் குழுவில் மாறுபட்ட கருத்துடன் சர்வேஸ்வரன்: நீதி அமைச்சர் அலி சப்ரி

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் விடயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களின் கருத்துகளை விடவும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர் என்பதனாலேயே அது தொடர்பான நிபுணர்கள் குழு வில் சர்வேஸ்வரனை இணைத்ததாகவும், இவ்வாறான வர்களின் கருத்துகளும் இருந்தாலே சகலரும் ஏற்றுக்கொண்ட சிறந்தவொரு அரசியலமைப்பை தயாரிக்க முடியுமாக இருக்கும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழுள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி, புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழுவில் அரசாங்கத்துக்கு நெருக்கமான சட்டத்தரணிகளை மாத்திரம் இணைத்துக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறு அமைக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியுமாக இருக்குமா என்ற கேள்விகள் எழுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில்,
லக்‌ஷ்மன் கிரியல்ல அரசியலமைப்பை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு தொடர்பாக முன்வைத்துள்ள கருத்து தவறாகும். நாங்கள் அவ்வாறு எங்களுக்கு நெருக்கமானவர்களைத் தெரிவு செய்து நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தக் குழுவில் உள்ள சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பீல்ட் மார்ஷலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் போதும், ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் அவர்களுக்காக ஆஜராகியுள்ளார். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவுக்காகவும் ஆஜராகியுள்ளார். அது அவரின் தொழிலே, அவர் இந்த நாட்டின் புகழ்பெற்ற சட்டத்தரணி. அவர் தனது காலத்தை நிபுணர்கள் குழுவில் செலவிடும் போது அவர்களைப் பற்றி இவ்வாறாகக் கூறுவது தவறாகும்.

இதேவேளை சர்வேஸ்வரன் என்று தமிழர் ஒருவரை நாம் அந்தக் குழுவில் இணைத்துள்ளோம். அவர் எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பெரும்பான்மையினத்தவரின் கருத்தில் நான் இல்லை. அதனை விடவும் வேறான கருத்தையே தான் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவ்வாறான நிலைப்பாடுதான் எங்களுக்கு அவசியமாகும். இதனால் தான் சர்வேஸ்வனை நான் அந்தக் குழுவில் நியமித்தேன்.

இறுதியாக இந்த நாட்டில் சகலரும் ஏற்றுக்கொண்ட சிறந்தவொரு அரசியலமைப்பை தயாரிக்க வேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அப்படி இல்லாட்டாவிட்டால் இன்னும் 20 வருடங்களில் அதனை மாற்ற வேண்டி வரும்.

இதனால் சுயாதீனமாகச் செயற்படுபவர்கள் தொடர்பாக இப்படி தவறான கருத்துகளைக் கூறினால், சுயாதீனமாக செயற்படு பவர்கள் வர மாட்டார்கள். நான் நியமித்துள்ள 17 குழுக்களில் 105 பேர் வரையிலானோர் தாமாகவே பணியாற்றுகின்றனர். அவர்கள் நம்பிக்கையுடனேயே பணியாற்றுகின்றனர். இதனால் அவர்களைப் பற்றி தவறாகக் கூற வேண்டாம் என்றார்.

Be the first to comment

Leave a Reply