கொரோனா நெருக்கடி மத்தியிலேனும் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்!- கஜேந்திரன் எம் பி

கொரோனா நெருக்கடி மத்தியிலேனும் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்!- கஜேந்திரன் எம் பி

சிறைச்சாலைகளில் பரவியுள்ள கொரோனா கொத்தணிகளால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் சுகாதார அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாடுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு பேம்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

எதுவித வழக்குகளும் தாக்கல் செய்யபடாமல் பல ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதிகள் இந்த கொரோனா தொற்றுக்காலத்திலாவது விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய மகசின் சிறையில் 54 கைதிகள் ஒன்றாக இருந்த நிலையில் அவர்களில் 14 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களின் நிலைமை குறித்து அறிய பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் அரசியல் கைதிகள் பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் இல்லாத நிலையில் வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறு பலர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு ஆதாரம் இன்றி சிறையில் அடைக்க வழி செய்யும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் கஜேந்திரன் கூறினார்.

கொரோனா தொற்று செயலணி முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர். உரிய துறைசார் நிபுணர்களின் வழிநடத்தலின் கீழ் பணிபுரிவதை விடுத்து, இந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத இராணுவத்தை இதற்கு பொறுப்பாக நியமித்தமை ஏற்கப்பட முடியாதது எனவும் கூறினார்.

இராணுவத்துக்கு போதிய சுகாதார அறிவு இல்லை. இதனால்தான் கொரோனா தொற்று நோய் மோசமான நிலையை அடைந்துள்ளது. இராணுவத்தினரின் தலைமைத்துவதத்தால் தங்கள் கடமையை செய்ய முடியாது சுகாதார அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர் எனவும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனாவால் இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை புதைப்பதால் எந்தத் தீங்கும் இல்லை என சுகாதார வல்லுநர்கள் மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புக்கள் பரிந்துரைத்துள்ளபோதும் எரித்தே தீருவோம் என இந்த அரசு அடம்பிடிப்படை ஏற்க முடியாது.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அவர்களுடைய சம்பிராதயப்படி புதைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரன் வலியுறுத்தினார்

Be the first to comment

Leave a Reply