இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சபையில் நன்றி தெரிவித்த சுமந்திரன்

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விடுத்த கோரிக்கைக்கு அவருக்கு நன்றிகளை கூறிக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் இதன்போது மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டு வருவதாகவும், அதேபோல் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் அதிகாரப் பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டைக் கையாளும் என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார். அவரின் அந்தக் கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

இதேவேளை தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக, தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.

Be the first to comment

Leave a Reply