இரத்தினபுரி வைத்தியசாலையின் 3 வார்டுகள் மூடப்பட்டன

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, வைத்தியசாலையின் 3 வார்ட்களை (Ward) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் அனோஜ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

தமது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு எழுமாற்றாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வார்டொன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அங்கு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையின் 4 ஊழியர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வார்ட் மூடப்பட்டதாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் அனோஜ் ரொட்ரிகோ குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 15 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் கூறினார்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளை பேணிய 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் தற்போது ஆளனி பற்றாக்குறை நிலவுவதால், வைத்தியசாலையின் ஏனைய இரண்டு வார்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிடுகின்றார்.

COVID – 19 இரண்டாம் அலை தொடர்ந்தும் நீடிப்பதால், சுகாதார பிரிவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மருந்து விநியோக நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

தொற்றா நோயாளர்களுக்கு 575,000 இற்கும் மேற்பட்ட மருந்து பொதிகள் தபால் திணைக்களத்தினூடாக, விநியோகிப்படுவதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீளாய்வு செய்யப்படுகின்றன.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறுத்து ஆராயப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவையின் தொற்றுநோய் பிரிவு மற்றும் COVID – 19 ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

PCR பரிசோதனைகள் , தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்டவற்றிற்கு, அரசினால் 100 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply