119க்கு தவறான தகவல் வழங்கியவர் கைது; பொதுமக்கள் 119ஐ தவறாக பயன்படுத்த வேண்டாமெனவும் பொலிஸார் வேண்டுகோள்

பொலிஸ் அவசர ஹொட்லைன் 119 ஊடாக பிழையான தகவல்களை வழங்கியதன் மூலம் பொலிஸாரை தவறாக வழிநடத்திய குற்றத்துக்காக தெஹிவளை கல்தெர கார்டனைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த நபரை நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கண்டியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து இந்நபர் பிழையான செய்தியை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இவர் வேண்டுமென்றே பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர ஹொட்லைன் 119ஐ தவறாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த ஹொட்லைன் விபத்துகள், குற்றங்கள் மற்றும் அனர்த்தங்கள் குறித்து அறிவிப்பதற்காகவே நிறுவப்பட்டுள்ளது என மேலும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply