யாழ்.பல்கலை; நிபந்தனையின்றி விடுவியுங்கள் என்ற நிபந்தனையுடன் போராட்டம் தொடர்கிறது

யாழ்.பல்கலை; நிபந்தனையின்றி விடுவியுங்கள் என்ற நிபந்தனையுடன் போராட்டம் தொடர்கிறது!

நிபந்தனையின்றி விடுவியுங்கள், விடுதலை தொடர்பில் எழுத்து மூலம் உத்தரவாதம் தாருங்கள் போன்ற நிபந்தனைகளை விதித்து யாழ்.பல்கலைக்கழக உயர் சபையால் வகுப்புத் தடை அறிவிக்கப்பட்ட மாணவர்கள் 2ஆவது நாளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் வருட மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றமையால் அவரைத் தாக்குவதற்கு முயன்ற வேளை அதனைக் கட்டுப்படுத்த முயன்ற துணைவேந்தர் உட்பட்ட பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை வன்முறை ரீதியாக கையாள முற்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிவுக்கு அமைய அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தனிநபர் விசாரணை ஆணையம் முன்வைத்த பரிந்துரைக்கு அமைய யாழ்.பல்கலைக்கழக உயர்சபையின் அங்கீகாரத்துடன் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குறித்த காலங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் அவர்களில் சிலர் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் போராட்டத்தின் தொடராக, மனிதாபிமான அடிப்படையில் தடையை உடனடியாக நீக்குவதாக துணைவேந்தர் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பினை யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி சி.ராஜ்உமேஸ் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன், பல்கலைக் கழக சட்ட நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் எஸ். கண்ணதாசன் மற்றும் ஒழுக்காற்று அதிகாரி பி. ஹஜந்தன் ஆகியோர் நேரில் சென்று துணைவேந்தரின் முடிவை மாணவர்களுக்கு அறிவித்ததோடு, உணவு ஒறுப்பைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர். இருந்தபோதிலும் தமக்கு எழுத்து உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்றும், நிபந்தனையின்றி தாம் விடுவிக்கப்படவேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு இன்று காலை அவர்களின் விரிவுரையாளர்களில் ஒருவராகிய கலாநிதி ஜீவசுதன் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்த்தகராறு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply