ஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு!

ஆயுள்தண்டனைக் கைதி சுமண தேரருக்கு பொதுமன்னிப்பு!

மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையில் ஆயுதம் ஒழித்துவைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஊவ தென்ன சுமண தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

T56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.

இவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் போராளிகள் என்று தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சுமண தேரருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது

Be the first to comment

Leave a Reply