சிலரது கனவு முதல்வர் கனவு- பலரது கனவு தேசக் கனவு: மணிவண்ணனுக்கு சுகாஸ் சாட்டையடி (Video, Photo)

சிலரது கனவு முதல்வர் கனவு- பலரது கனவு தேசக் கனவு: மணிவண்ணனுக்கு சுகாஸ் சாட்டையடி (Video, Photo)

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் கொட்டும் மழைக்கும், கொடும் பனிக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் மத்தியில் 1400 நாட்களைக் கடந்து வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் எந்தக் கட்சி காணாமல் ஆக்கும் விடயங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டுமோ? யார் எங்கள் இளைஞர், யுவதிகளை யாழ்.மண்ணில் கடத்தினார்களோ அவர்களுடன் சேர்ந்து யாழ். மாநகரசபையின் முதல்வர் பதவியைக் கைப்பற்றிவிட்டுத் தோழர் மணிவண்ணன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தான் பிரார்த்திப்பதாகத் தோழர் மணிவண்ணன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நீங்கள் ஏற்கனவே டீல் அடித்து யாழ். மாநகரசபையின் முதல்வர் பதவியை ஈபிடியுடன் சேர்ந்து பெற்றுக் கொண்ட போது தாங்கள் யாரைக் கடத்திக் காணாமல் ஆக்கினார்களோ அவர்களை விடுவிப்பதாக ஏதாவது உத்தரவாதத்தைத் தோழர் டக்ளஸ் தேவானந்தா தந்தாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஸ் “சிலரது கனவு முதல்வர் கனவு- பலரது கனவு தேசக் கனவு” எனவும் தெரிவித்தார்.https://www.youtube.com/embed/bMlc95p5w54?feature=oembed

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,        

நாங்கள் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை இழந்துள்ளோம். ஒரு இலட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். இற்றைவரை குற்றப் பத்திரம் கூடத் தாக்கல் செய்யாமல் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, நீங்கள் மக்களை ஏமாற்றக் கூடாது, இரட்டை வேடங்கள் போடக் கூடாது. யார் காணாமல் ஆக்கினார்களோ அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டு, முதல்வர் பதவியைப் பெற்றுவிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீங்கள் நீலிக் கண்ணீர் வடிப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கப் போவது கிடையாது.

தியாகதீபம் அண்ணன் திலீபனைப் பாராளுமன்றத்தில் எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கொச்சைப்படுத்திய ஈபிடிபியினதும், டக்ளஸ் தேவானந்தாவினதும் ஆதரவைப் பெற்றுவிட்டுத் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். உங்களின் இவ்வாறான கபட நாடகத்தைப் பார்க்கின்ற போது அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை. இந்த இரட்டை வேடம் மக்கள் மத்தியில் எடுபடப் போவது கிடையாது.

தோழர் மணிவண்ணன் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் கட்சியில் இருந்த போது தூய கரங்கள்….தூய நகரம்… என்ற கொள்கையை முன்வைத்துப் பிரச்சாரம் செய்திருந்தார். இந்தநிலையில் அவர் நேரடியாக அல்லாமல் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார அடிப்படையில் தான் உறுப்பினர் ஆனார்.

தற்போது கடந்த யாழ்.மாநகரசபை ஆட்சியில் மோசடி செய்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆகவே, உங்கள் தூய கரங்கள்….தூய நகரம்… என்ற கொள்கைக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஒருபோதும் இல்லை.

ஏனெனில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு இல்லாமல் தோழர் மணிவண்ணனால் மாநகரசபையில் இருக்கின்ற ஒரு தும்புத்தடியைக் கூட அகற்ற முடியாது. ஒரு விளக்குமாற்றைக் கூட யாழ்.. மாநகரசபைக்கு வாங்க முடியாது.ஏனெனில், மணிவண்ணன் தற்போது தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கைப்பாவையாக மாறியுள்ளார்.

நாங்கள் மணிவண்ணனை எங்கள் கட்சியிலிருந்து நீக்கிய போது மணிவண்ணனின் நீக்கத்திற்கு விரைவில் காலம் பதில் சொல்லும் எனத் தெரிவித்திருந்தோம். காலம் பதில் சொல்லியிருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சொல்வார்கள். விரைவில் இது நடக்கும்.

மணிவண்ணனின் கொள்கை தான் என்ன? ஒரு நாடு இரு தேசம் என்றார். தற்போது 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து ஆட்சியமைத்து யாழ். மாநகர முதல்வர் ஆகியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்பதாக கூறுகிறார். காணாமல் ஆக்கியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆகவே, இந்த இரட்டை வேடங்களை மக்கள் புரிகின்ற காலம் விரைவில் வரும். அப்போது இந்த தேசவிரோத சக்திகள் அனைவரும் களை எடுக்கப்படுவார்கள்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை எங்களுடைய சில யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்களும், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களும் தோழர் மணிவண்ணனுக்கும், அவர்சார்ந்த குழுவுக்கும் ஆதரவளித்தமை உடனடியாகப் பார்க்கின்ற போது கவலைக்குரிய விடயமாகவிருந்தாலும் நீண்டகாலப் போக்கில் எங்கள் அமைப்பைப் பலப்படுத்துகின்ற விடயமாகவே பார்க்கின்றோம்.

தோழர் மணிவண்ணன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்காக எங்கள் விடுதலை இயக்கத்திற்குள் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்ட சில சமூக விரோதிகளையும், அவரது நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு களையெடுப்பதற்கான வாய்ப்பைத் தோழர் மணிவண்ணன் எங்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆகவே, இனித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு விசுவாசமாகவும், அவருடைய ஒருநாடு…இருதேசம்…என்ற கொள்கையை முன்னிறுத்தித் தூய்மையான, நேர்மையான அரசியலைச் செய்பவர்களாகவும், ஈழத்தில் அரங்கேறிய இனப் படுகொலைக்குச் சர்வதேச விசாரணை கோரி நிற்பவர்களாகவும் விளங்குவார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பது  ஒரு கொள்கை ரீதியான கட்சி. கட்சி என்பதனையும் தாண்டிய ஒரு அரசியல் இயக்கம். தமிழ்த்தேசத்தின் இருப்பையும், தமிழ்மக்களின் விடுதலையையும் முன்னெடுக்கக் கூடிய இறுதிச் சக்தியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான் காணப்படுகின்றது. அந்தவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எத்தகைய நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்குச் சற்றும் குந்தகம் இல்லாத வகையில் எங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply