
பிறந்த உடனேயே மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசு சடலமாக மீட்பு!
பிறந்த உடனேயே மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ். அரியாலை புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு மாதவிடாய் கால இரத்தப் போக்கு கட்டுப்படாதிருப்பதாக கூறி நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இத்திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், குறித்த யுவதிக்கு நேற்றைய தினம் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போதே உயிரற்ற நிலையில் இருந்த காரணத்தினால் மண்ணில் புதைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த குறித்த யுவதிக்கு இன்னும் திருமணமாக நிலையில் குழந்தை பிறந்துள்ளமை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்று சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். பொலிஸார் சிசு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து பச்சிளம் சிசுவை சடலமாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்
Be the first to comment