கல்முனை மாநகரை முடக்கி மக்களைக் காப்பாற்றுமாறு பொது அமைப்புகள் மாநகர சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை

கல்முனையில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தொற்று கூடுதலாக இனங்காணப்பட்ட பகுதிகள் அடங்கலாக கல்முனை மாநகரை முடக்கி மக்களைக் காப்பாற்றுங்கள்.

இவ்வாறான கோரிக்கையை கல்முனை விகாரையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களிடம் விடுத்துள்ளனர்.
குறித்த கூட்டம் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர எல்லைக்குள் நேற்று வரை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கில் 144பேரும் சாய்ந்தமருதில் 33 பேரும் கல்முனை வடக்கில் 11பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், வி.சிவலிங்கம், கே.செல்வராசா, எஸ்.சந்திரன் ஆகியோரும் பொலிஸ் நிலையப் பிரதிநிதியும் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

கல்முனையின் பல பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் சுகாதார நெறிப்படி கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் பொது அமைப்புகளின் இக்கோரிக்கையை எழுத்துமூலம் பெற்று கல்முனை மாநகர சபை மேயர் மற்றும் சுகாதார சேவைப் பணிப்பாளரையும் சந்தித்து முடிவெடுப்பது என்று கூட்ட முடிவில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று உறுப்பினர் ராஜன் தலைமையிலான குழுவினர் அவர்களைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.

Be the first to comment

Leave a Reply