கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி, யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் முன்வைத்த போது, அது 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முதல்வர் பதவி வறிதாக்கப்பட்டது.

அந்தப் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று புதன் கிழமை மாலை யாழ்ப்பாணம் – மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் கட்சியின் பிரமுகரகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவு அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Be the first to comment

Leave a Reply