இலங்கையின் கொரோனா நிலவரம்! அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் மறுபுறம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 392 பேரும் சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 35 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 381 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய ஒருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 50 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 29 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 576 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .

அதேநேரம் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 183 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply