யாழ் மாநகர சபை விவகாரம் கூட்டமைப்புக்கு த.தே.ம.முன்னணி நிபந்தனை!

யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை விவகாரம்; கூட்டமைப்புக்கு த.தே.ம.முன்னணி நிபந்தனை!யாழ்.மாநரசபைக்கு மீண்டும் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் மற்றும் நல்லூர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் மீண்டும் முன்நிறுத்தப்பட்டால் குறித்த நிபந்தனைகளை தோற்கடிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.

இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

யாழ்.மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய சபைகளில் அங்கம் பெறுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுடன் இன்று மாலை சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,

யாழ்.மாநகரசபையின் முதல்வர் பதவிக்கு ஆர்னோலட் தகுதியற்றவர். 03 வருடமாக அவருடைய செயற்பாடுகள் ஆரோக்கியமற்றவையாக காணப்பட்டே வந்திருக்கின்றன. வரவு – செலவுத்திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தபோது குறித்த காரணங்களை வெளிப்படுத்திவந்திருக்கின்றோம்.

இதே நிலைப்பாடு தான் நல்லூர் பிரதேச சபையிலும் காணப்பட்டுவந்திருக்கின்றது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர்களைத் தவிர்த்து புதிதாக முதல்வரை மற்றும் தவிசாளரை முன் நிறுத்தினால் அவர்களை ஆதரிப்பது தொடர்பில் எங்களுடைய கட்சி முடிவுகளை எடுக்கும்.

அவ்வாறு இல்லாமல் முதலில் இருந்தவர்களே மீண்டும் வெற்றிபெற்று வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் போது அந்த வரவு – செலவுத்திட்டத்தினையும் தோற்கடிப்போம்.

இவ்வாறான சூழலில் மீண்டும் இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரிசனை காட்டாவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தமது கட்சி ஆட்சியமைக்காது என்றும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

அதேவேளை தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல்வர், தவிசாளர் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply