மட்டக்களப்பில் தொடர் அடை மழை; குளங்களின் நீர் மட்டமும் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை தொடர் அடை மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்வில் சற்றுத் தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பலத்த மழை பெய்து வருவதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பலத்த சிரமங்களுக் குட்பட்டு வருகின்றனர். இதனைவிட அரச, அரச சார்பற்ற உத்தியோகஸ்தர்களும் கடமைக்குச் செல்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க மாவட்டத்திலுள்ள பொருமபாலான கிராமங்களின் உள் வீதிகள் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் உள்ளூர் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கரையோரப் பிரதேசங்களை அண்டிய கிராமங்களில் இவ்வாறு மழை வெள்ளம் தேங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (22) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், ஆகக்கூடியதாக வாகனேரிப் பகுதியில் 214.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நீர் நிரம்பியுள்ளன. குறிப்பாக களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மகிளூர், குருமண்வெளி, கிராங்குளம், எருவில், வெல்லாவெளி, கோவில்போரதீவு, பெரியபோரதீவு, பழுகாமம் உள்ளிட்ட பல இடங்களிலலுள்ள சிறிய குளங்களில் முற்றாக நீர் நிரம்பியுள்ளன.

இதேவேளை மாவட்டத்திலுள்ள பிரதான பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி உன்னிச்சைக் குளத்தில் தற்போது 19 அடி 3 அங்குல நீர் மட்டமும், வாகனேரிக் குளத்தில் 20 அடி 8 அங்குல நீர் மட்டமும் (அக்குளத்தில் தற்போது 1 அடி 6 அங்குல அளவிற்கு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.) வெலிக்காகண்டிய குளத்தில் 12 அடி 9 அங்குல நீர் மட்டமும், கித்துள்வெவ குளத்தில் 6 அடி 6 அங்குல நீர்மட்டமும், உறுகாமம் குளத்தில் 16 அடி ஒரு அங்குல நீர் மட்டமும், (அக்குளத்தில் 8 அடி உயரத்தில் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன). கட்டு முறிவுக்குளத்தில் 12 அடி 6 அங்குல நீர்மட்டம் காணப்படுவதோடு அதில் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.

வடமுனைக் குளத்தில் 12 அடி 6 அங்குல நீர்மட்டம் காணப்படுவதோடு, புணானை அணைக்கட்டில் 11 அடி 2 அங்குல நீர்மட்டம் காணப்படும் நிலையில் அக்குளத்திலுள்ள 10 வான்கதவுகளும் தற்போது 10 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் சந்திரசேகரம் நிரோசன் தெரிவித்தார்.

இந்நிலையில் நவகிரிக்குளத்தில் தற்போது 19 அடி 3 அங்குல நீர் மட்டமும் தும்பங்கேணிக் குளத்தில் 12 அடி 3 அங்குல நீர் மட்டமும் காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் முருகேசு பத்மதாசன் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (22) மரணமடைந்த ஒருவரை சேமக்காலையில் புதைக்க முடியாத அளவுக்கு குழி வெட்ட வெட்ட நீர் ஊறிக் கொண்டே இருந்துள்ளது. இந்நிலையிலும், பைகளில் மண் மூட்டைகள் கட்டி பிரேதப் பெட்டியின் மேல் வைத்தே மிகுந்த சிரமத்தின் மத்தியில் சடலத்தை உறவினர்கள் அடக்ககம் செய்துள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply