ரஷ்யாவின் கொரோனா வைரஸ் மருந்தினை பெற்றுக்கொள்வது குறித்து அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தை – இராஜாங்க அமைச்சர்

ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  Sputnik V  இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஷ்யத் தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ள அவர் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதற்கு முன்னரே ரஷ்ய மருந்து அரச துறையினருக்கு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் நான் ரஷ்யத் தூதுவரை அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளுக்காக சந்திப்பேன் அரசாங்கங்களுக்கு இடையில் அந்த மருந்தினை வழங்க அவர்கள் தயாராக உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் தனது மருந்தினை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளதால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் அந்த மருந்தினை கொண்டுவர முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பல பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அதனடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எந்த மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும், என்ன விலை என்பது போன்ற விபரங்களை தீர்மானிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினர் ஊடாக மருந்துகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம், நாங்கள் தற்போது மொடேர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் சீன மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலை, சேமிப்பதற்கான காலநிலை போன்றவற்றின் அடிப்படையில் எந்த மருந்தினை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர முடியும் எனத் தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பைசர் நிறுவன மருந்து கடினமானதாக காணப்படுகின்றது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply