
இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பணிக்குழு கூட்டத்தின் போது கொரோனா வைரஸ் தொற்று அதிகளவு பரவுகின்றமையினால் இரத்தினபுரி நகரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
இந்த குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இரத்னபுரி, குடுகல்வத்த பகுதியில் எழுமாற்றாக 20 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் பி.சி.ஆர்.பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி நகர எல்லையிலுள்ள அனைத்து மசூதிகளையும் இன்று மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் மத வழிபாடுகள், வழிபாட்டாளர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அம்மாவட்டத்திலுள்ள செலான் வங்கி சந்தி முதல் டிப்போ சந்தி வரையுள்ள அனைத்து கடைகளையும் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிக சமூகத்தின் பாதுகாப்பிற்காக அனைத்து வர்த்தகர்களும் தங்கள் கடைகளை மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழ்நிலை காரணமாகவே இரத்னபுரியில் உள்ள 3 பாடசாலைகள், இந்த மாதம் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 572 ஆக காணப்படுகின்றது. ஆகவே, தற்போதைய ஆபத்து நிலைமை நீங்கும் வரை இரத்னபுரி பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be the first to comment