மாலைதீவிற்கு வந்துவசிக்குமாறு இலங்கை முஸ்லீம்களிற்குவேண்டுகோள் விடுக்கவேண்டும்- அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கருத்து

மாலைதீவிற்கு வருமாறு இலங்கையின் முஸ்லீம்களிற்கு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்களை அந்த நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வந்து வசிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசாங்கம் இதனை செய்யாதது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன்,என குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிசடங்கினை நடத்துவதற்கான சிறுபான்மை முஸ்லீம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலும் இது குறித்து ஆராயப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் உதவி கோரப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு பதிலளிக்ககூடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகள் எதனையும் எடுக்காது இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முடிவை அடிப்படையாக வைத்தே அரசாங்கம் தனது முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் குழுவொன்றை அமைக்கும் போது அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காவிட்டால் அவ்வாறான குழுவை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை நீங்கள தன்னிசை;சையான முடிவுகளை எடுக்கலாம் எனவும் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வேறு எங்காவது எடுத்துச்செல்லுவது குறித்து யாராவது தெரிவித்தால் அது குறித்தும் நிபுணர்களுடன் ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையி;ல் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மாலைதீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதியின் விசேட வேண்டுகோலை மாலைதீவு ஜனாதிபதி ஆராய்ந்துவருகின்றார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை அடிப்படையாக வைத்தே மாலைதீவு ஜனாதிபதி இது குறித்து ஆராய்கின்றார் கொரோனா வைரசினால் எதிர்நோக்கப்படும் சவால்களிற்கு தீர்வை காண்பதற்க்கு உதவும் நோக்கிலும் மாலைதீவு இது குறித்து ஆராய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply