இறக்குமதி யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் ரோஹித்த

இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்து முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எமது தேசிய உற்பத்தி பொருட்களை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தி அதன்மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் 20 நாட்கள் நடத்தப்பட்டு அதனை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றவும் எம்மால் முடிந்தது.

சம்பிரதாயமற்ற, தேசிய உற்பத்திக்கு முதலிடம் கொடுக்கின்ற, இறக்குமதி கட்டுப்பாடு, முதலீடுகளுக்கு முதலிடம் கொடுப்பதே இதன் நோக்கம்.

நாட்டிற்குள் உற்பத்தி செய்யமுடியுமான பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து இறக்குமதி யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சர்வதேசத்திற்கு எமது உற்பத்திகளை அறிமுகம் செய்து அதனூடாக எமது வர்த்தகர்களை பலப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோதே பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆரம்பித்தார். கிராமத்தில் அரசியலை ஆரம்பித்ததுடன், அங்குள்ள மதத்தலைவர்கள், வயோதிபர்கள், ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் என குழுக்களை நியமித்து பேச்சு நடத்தினோம். அதன் பிரதிபலனாக பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை தற்போது எம்மால் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply