ஜோ பைடனின் வெற்றி தேர்வாளர் கல்லூரியினால் உறுதி

ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை அமெரிக்க தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வௌ்ளை மாளிகைக்கு செல்வதற்கான இறுதிப் படிமுறையிலும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களை பெற்று வெற்றி கொண்டார்.

குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களை பெற்றார்.

அமெரிக்க தேர்தல் முறைமையின்படி, நியமிக்கப்பட்ட தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்களுக்கே வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்குவர்.

தெரிவு செய்யப்படும் தேர்வாளர் கல்லூரி உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளருக்கான தமது வாக்கினை தேர்தல் நிறைவடைந்த சில வாரங்களில் வழங்குவார்கள்.

இவ்வாறான நடைமுறைகள் காணப்படுகின்ற போதிலும், தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில், அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தமது பதவியை இராஜினாமா செய்வாரென ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவருடைய பதவி ஜனவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென அமெரிக்க சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.

வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் ட்ரம்பினால் சுமத்தப்பட்டுவந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு வௌியானது.

இதனையடுத்து இருவருக்குமிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

தேர்தல் பிரசார காலப்பகுதியில், ஜோ பைடனின் மகன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை பகிரங்கப்படுத்தாமை தொடர்பில் அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பாரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply