விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளோம் : பசில் ராஜபக்ஷ

‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்துக்கு’ செயல்திட்டத்தின் ஊடாக கிராமப்புற விளையாட்டு மைதான புனரமைப்பு மற்றும் இளைஞர், யுவதிகளுக்கான விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் எதிர்வரும் ஆண்டுக்குள் கிராம மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த முடியும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அதிகாரிகளுடன் இன்று (2020.12.10) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி விளையாட்டுப் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தினூடாக எதிர்பார்ப்பதாகவும், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென 8264 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட வரலாற்றில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென அதிக தொகை ஒதுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் லங்கா பிரிமீயர் லீக் போட்டியை நடத்துகின்றமை பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கிராம மட்டத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைக்கும் போது இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் விளையாட்டு மைதானங் களைத் தயாரிக்கும் போது கிராம சேவகர் பிரிவுக்கு விளையாட்டுக் கழகமொன்றை ஆரம்பித்து அந்த விளையாட்டுக் கழகத்தின் தலையீட்டுடன் விளையாட்டு மைதானத்துக்கு உகந்த இடத்தை தெரிவுசெய்யுமாறும் பசில் ராஜபக்ஷ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாடசாலை மட்டத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைக்கும் போது மாகாண கல்வி அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கிராம மட்டத்தில் புனரமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விளையாட்டுத் திறன் கொண்ட கிராம இளைஞர், யுவதிகளை தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வது இந்த வேலைத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply