அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியே முடிவு எடுப்பார்!

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியே முடிவு எடுப்பார்!

‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்று தமிழ் அரசியல்வாதிகள் கூறும் சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் ஆகியோரை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும்.

– இவ்வாறு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் அரசியல்வாதிகள் கூறும் தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள்.

அவர்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்களுமே தற்போது சிறைகளில் உள்ளனர்.

எனவே, அவர்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்மானம் எடுக்கவேண்டும். அது தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது.

தற்போதைய எம்.பி. பிள்ளையான் (சந்திரகாந்தன்) கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரிலேயே அன்று கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், அதற்கான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த நல்லாட்சி அரசில் அரசியல் பழிவாங்கல் காரணமாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பிள்ளையானின் விடுதலையை உதாரணம் காட்டி தாம் சொல்லும் ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற தமிழ்க் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றது. அவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிதான் தீர்மானம் எடுக்க வேண்டும்”- என்றார்

Be the first to comment

Leave a Reply