எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு

உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 செண்ட்டி மீட்டர் அதிகரித்துள்ளது.

இதை நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன.

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என்று அளவிடப்பட்டுள்ளதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவலி அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 1954 இல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய கணக்கெடுப்பு அமைப்பு அளவிட்டு 8,848 மீட்டர் இருப்பதாக அறிவித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியிருக்கக் கூடும் என்று பலரும் சந்தேகம் வௌியிட்டனர்.

இதையடுத்து, அந்த சிகரத்தின் உயரத்தை புதிதாக அளக்க முடிவு செய்யப்பட்டது. அந்த அளவெடுப்பு நடவடிக்கையின் முடிவில், எவரெஸ்டின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என தெரியவந்துள்ளது.

சிகரத்தின் முந்தைய உயரத்தைக் காட்டிலும், தற்போது 86 செண்டி மீட்டர் அதிகமாக உள்ளது.

இந்த தகவல்களை சீனாவும் பெய்ஜிங்கில் நேற்று (08) அறிவித்தது.

சீனா கடந்த 1975 இல் இரண்டு முறைகள் அளவிட்டு 8,848.13 மீட்டர் உயரம் இருப்பதாக அறிவித்தது. பின்னர், 2005 இல் இரண்டு முறைகள் அளவிட்டு எவரெஸ்டின் உயரம் 8,844.43 மீட்டர் என தெரிவித்தது. அதாவது கடைசியாக சீனா அளவிட்ட உயரம், நேபாளம் தற்போது மதிப்பிட்ட உயரத்தைவிட 4 மீட்டா் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply