அடுத்த சந்திப்பு ஜனாதிபதியுடன்! அங்கஜன் இராமநாதன் விடாமுயற்சி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட நீண்டகாலம் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திகதியொன்றை கோர வுள்ளதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை அமையவுள்ள நிலையில் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டவரென்ற ரீதியில் நீதியமைச்சர் அலி சப்ரியையும் இணைத்துக் கொண்டு அல்லது அவரது தலைமையில் ஆளும் கட்சியின் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது மேற்படி ஆலோசனையை நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் எம்.பி தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியிடம் திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு கோரவுள்ளதாகவும் திகதி ஒன்று கிடைத்ததும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply