நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..

நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..!

நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது

இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட பத்து நாட்களில் தானாக முளைத்து விடும்.

இவை இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை உடையதால், நெல் வயல் முழுவதும் பல டன்கள் பெருகிவிடும். அதேபோல் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் தழைச்சத்து நெல் சாகுபடியில் இதனால் சேமிக்கப்படுகிறது. இவற்றின் முக்கியமான பலன் காற்றில் உள்ள தழைச்சத்தை உறிஞ்சி நெல் பயிருக்கு கொடுப்பதோடு சில வளர்ச்சி ஊக்கிகளான அமினோ அமிலங்களை சேர்த்து பயிருக்கு அளிக்கிறது. அடுத்த படியாக இவை வயலின் மேற்பரப்பை போர்வை போன்று மூடி விடுவதால் களைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகின்றன. சூரிய ஒளியில் இருந்து இவை உணவை தயாரித்து கொள்கின்றன.

நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. நெல் வயலில் பயிர்களுக்கு இடையே கோனோவீடர் கொண்டு இழுக்கும் போது அசோலா சேற்றில் அமிழ்ந்து உரமாகின்றன. விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு. கொசுக்கள் தண்ணீர் மேல் பரப்பில் முட்டை இடுவது முற்றிலும் தடுக்க படுகிறது. இதனால் அவற்றின் பெருக்கம் கட்டுப்படுகிறது. இவற்றின் இலைகள் மேல் பரப்பில் மெழுகு பூச்சு உள்ளதால் எவ்வளவு மழை பெய்தாலும் இவற்றின் மீது மழை துளிகள் ஒட்டாது. இதனால் இவை பாதிப்பு இல்லாமல் மிதந்து கொண்டு இருக்கும். அசோலாவின் அடுத்த பயன்பாடு என்று பார்த்தால் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவு. இதனால் அவற்றின் சினை சுழற்சி சரியாக நடைபெறுகிறது. முதலில் பழகாத கால்நடைகள் சாப்பிட மறுக்கும். அப்போது இவற்றின் மேல் வெல்லம் கலந்த தண்ணீரை தெளித்து இரண்டு மூன்று நாள் தொடர்ந்து கொடுத்தால் பழகி விடும். கோழிகளுக்கும் இதே போன்றுதான். அசோலாவை உண்ணும் கோழிகள் இடும் முட்டைகள் மிக சுவை உள்ளவையாக இருக்கும். குஞ்சு பொறிக்கும் தன்மை சற்று அதிகரிக்கும். குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நல்ல தீவனமாக பயன்படும்.

இதை சாப்பிட்டு வளரும் மீன்கள் சுவையாக இருக்கும். அவைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். அசோலாவால் ஏற்படும் பிரச்சனை என்று பார்த்தால் மழைக் காலங்களில் மேல் வயல்களில் இருந்து அசோலாவை சுமந்து கொண்டு வரும் தண்ணீர் இளம் நெல் வயல்களில் வரும் போது அந்த பயிர்களை வளைத்து தண்ணீரில் அமிழ்த்து விடும். இதனால் நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படும். தனியாக தொட்டிகளில் வளர்ப்பவர்கள் அசோலாவிற்கு உரமாக மண்புழு உரத்தை தண்ணீரில் கரைத்து விட்டு அதில் வளர்க்கும் போது நன்கு வளரும். சாணம் நாற்றத்தால் கால்நடைகள் சாப்பிட மறுப்பதை தவிர்க்கலாம். ஆடுகள், முயல்கள், காடைகள், வான்கோழிகள் போன்றவற்றிற்கும் தீவனமாக தரலாம். நாமும் சமைத்து சாப்பிடலாம். அசோலா என்பது இயற்கை நமக்கு அளித்த கொடை என்றே சொல்லலாம்.

Be the first to comment

Leave a Reply